Vinayaka Chaturthi Restrictions in Tamilnadu





 விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகள்

 CONTENT: 
                  
  இந்தியா முழுவதும் வருகின்ற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.  இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டங்கள் பற்றிய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை:

           கொரோனா மூன்றாவது அலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  இதையடுத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அனுமதி இல்லை:

           தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும்  சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இல்லங்களில் கொண்டாடலாம்:

            மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாகவும்  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வீடுகளில் வைத்து வழிபட்ட  விநாயகர் சிலைகளை, கோவில்களின் வெளிப்புறத்திலும், சுற்றுப்புறத்திலும் வைத்துவிட்டு செல்லவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

மக்கள் கூடுவதற்கு தடை

          அதேபோல் சென்னை மற்றும் நாகை வேளாங்கண்ணியில் கொண்டாடப்பட உள்ள மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவின் போதும், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

           இதுகுறித்து இந்து  சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கூறுகையில்,      "எதிர்வரும் பண்டிகை காலங்களில் மிகுந்த  எச்சரிக்கையாக இருக்கும்படியும்   கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.   அதன் அடிப்படையில்தான்   தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக்    கட்டுப்பாடுகளை விதித்துள்ளது" எனவும் , மேலும் வரும்முன் காப்போம் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.





Post a Comment

0 Comments